Thursday, 19 July 2018

நீ கிடைத்தாய்

வரமும் நீ
என் வளமும் நீ
வாழ்வும் நீ
எனக்கான வைராக்கியமும் நீ
வீழ்ந்தாலும் தாங்குவாய்
நான் தோய்ந்தாலும் ஏங்குவாய்
காற்றடிக்க கலங்கவில்லை மனம்;
கடிந்துகொண்டால் கலங்கிவிடும்.
புயலடிக்க திகைத்ததில்லை நான்;
நீ அடித்தால் திகைத்திடுவேன்.
என் முதலும் நீ,
எனக்கான முடிவும் நீ.
மொத்தத்தில் நீ...
எனக்கான நீ!

கடந்து செல்லும் காலமில்லை நீ எனக்கு,
என்னோடு கூடவே கை பிடித்து,
நடந்து செல்லும் காலம்.

செம்புலப்பெயர்போல
அன்றில் பறவையை போல
புள்ளிமானை போல
என்னுடன் நீ
என்றும் நீ
எனக்காக நீ;

வேண்டும் இக்கணம் மட்டுமின்றி
எக்கணமும் நீ.

தொலைத்தேன் என்னை நான்
தொலைவில் நீ இருந்தால்.
தொலைவேன் என்னில் நான்,
கண்ணிரண்டில் மூழ்கி
அருகில் நீ இருந்தால்.
கள்வனும் நீ 
கண்ணாலனும் நீ 
கணப்பொழுதும் துயிலில்லை
மனம்முழுதும் கலையில்லை 

காரணம் நீ 
இங்கில்லை...
எனதருகில் இல்லை.

காலம் முழுக்க பெற்ற தவமாய் 
உற்ற உறவாய்!
உயிராய்!!

தோழனாய் !!!
கிடைத்தாய்  நீ ...



Related image

அலைபாயுதே


Image result for wandering
      கலகலப்பான கயமையற்ற கண்ணோட்டம், வாழ்க்கையில் வந்தோர், சென்றோர் என எத்தனை எத்தனை பேருண்டு , அத்தனை அத்தனை மனிதர்களும் பார்த்ததும் உண்டு, உன்னை தாண்டிச் சென்றவர்களை விறல் கொண்டு எண்ணிவிடலாம். மனமும் குணமும் ஒரு நிமிடத்தில் நிலை தடுமாறும் எனில் அங்கே மனச்சிதறல் வந்து அரங்கேறிவிட்டது என்றே அர்த்தமாகிறது. காதலில் ஒருபுறம் மனம் தடுமாற, வாழ்க்கையில்  ஒரு முறை நிலை தடுமாற, கண்டதிலும், கேட்டதிலும் சில நேரங்களில் இருக்கவே. காணாததிலும் சில நேரங்களில் லயித்து தான் போகின்றது இந்த மனம்.


மனமோ குரங்கென்பர், குணம் பற்றி கவலையில்லாதவராக, களமும் நேரமும் ஒருவரை எப்படியும் மாற்றி சிந்திக்க வைத்துவிடும். காட்சிப்பிழைகள் கண்களுக்கே உரிய சொந்தக்காரர்களாக வலம் வருகின்ற தருணத்தில்.
பாய்வதும் பாயவிடுவதும் மனதின் செயல் மட்டும் என மனதின் மேல் முழு குற்றத்தையும் சுமத்திவிட முடியாது ஏனென்றால், எண்ணமும் கண்ணோட்டமும் ஒன்றே இணக்கமாக இணங்கும் பட்சத்தில் மனமும் அதற்கு ஆசையை வளர்க்கும் விதமாக ஒரு வித தூண்டலை மட்டுமே முழுமையாக பலமாக கொடுத்து கொண்டே இருப்பதால் தான் மனம் எதை கண்டு வியக்கிறது, எதனை நோக்கி பயணிக்கிறது, எதை தனக்கென்று ஆக்கிக்கொள்ள துடிக்கின்றதோ, தேடி தேர்ந்தெடுக்கின்றதோ அதையே ஆத்மாத்மமாக  அடைய மனம் உந்தசெய்து  விடுகிறது. அலைபாய்வது தவறொன்றுமில்லை பாதை தவறாமல் போகும் பட்சத்தில். ஆனால் அதற்கு அத்தனை பெரிய பக்குவமும் இருந்தாக வேண்டி இருக்கின்றது. சற்றே கடினம் தான் மனதை கட்டுப்படுத்துவது என்பது அசாத்தியமான ஒன்றாக தான் இருக்கும் ஆனாலும் ஆழ்ந்து சிந்தித்து புரிதலில் வேரூன்றிவிட்டால் மனதை ஒருமுகப்படுத்தி வாழ்வை நிலையாக பெற்றுக்கொள்ளலாம்.


மனம் மனம் தான்.
குணம் குணம் தான். 
பகுத்து அறிவதும், பகுத்ததில் புரிவதுமே சாலச் சிறந்தது. 


Monday, 16 July 2018

யாருக்கும் தெரியாமல்


ஏதேதோ எண்ணங்கள் வந்து அலைபாய்வதே மனதின்  அனிச்சை செயலாக திகழ்கின்றது.
          எண்ணங்களும் எண்ணத்தின் ஓட்டங்களும் கட்டுக்கடங்குவது ஏனோ ஒரு பெரிய சவாலாகவே அமைந்துவிடுகின்றது. காலத்துக்கும் அதன் கணக்கிற்கும் என்றுமே தனி ஒரு மனிதனால் முடிவு கட்ட இயலுவதில்லை, காரணம் முயற்சி செய்ய சிலர் முயல்வதுமில்லை, முயன்றும் தோற்பதால் மீண்டும் முயற்சிக்க மனம் வருவதுமில்லை.
           எண்ணங்களின் பிதற்றல்களில் வாழ்க்கையில் பலருக்கு கிழிசல்கள் விழுகின்றன. எண்ண ஓட்டங்கள் மனிதனின் மன நிலையை மட்டுமின்றி, முழு மனிதனின் வாழ்க்கைக்கான ஆழத்தையே ஆட்டி படைத்துத்தான் பார்த்துவிடுகின்றது. மன  குழப்பங்கள் மன  அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி அதோடு மட்டுமின்றி இல்வாழ்வையே சீர்கெடுத்து விட காரணியாகவே மாறிவிடுகின்றது.
            எத்தனை எத்தனை அர்த்தங்கள் அதிலும் எண்ணிலடங்கா புரிதல்கள், காலத்தின் கட்டாயமாக சில சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் மனிதர்களின் கட்டளையாகவே பல நிகழ்வுகளும் அரங்கேறத்தான் செய்கின்றன. தெரியாமல் அடைகின்ற வேதனைகள் தெரிந்தே கிடைக்கும் சோதனைகளால் கிடைக்கும் பரிசுப்பொருளாக. வேதனைகளின் விடையாக வித்தியாசமான விளைச்சலாக பரிதவிக்கும் பங்காளிகளாக மனம் தினம் நொந்து வெம்பி விடுகின்றது இவற்றில் சிக்கி திணறல் தாங்காமல். யாருக்கு தெரியும் ஒருவரின் மனதில் இதுதான் இருக்கின்றது என, வாய்ப்புகள் கிடைத்தாலும் வலி பெரிதாக தெரிகின்றதாலோ என்னவோ மீள முடியவில்லை. வைப்புகளுக்கே சில இடங்களில் வாய்ப்பளிக்கவும் முடியவில்லை. எல்லையற்ற இன்பம் கேட்பதில்லை மனம், மாறாக அமைதியான அழகான, அளவான வாழ்க்கை வாழ தானே ஆசை படுகின்றது. அதற்கும் தான் எதனை சோதனைகள், எத்தனை  அவமானங்கள். துன்பங்களும் துயரங்களும் தோளில் தொய்வை ஏற்படுத்துவதில் சற்றும் மனிதாபிமானம் காட்டுவதில்லை.
       
சோகங்கள் நெஞ்சில் கீறலையும் கிழிசல்களையும் தந்த போதிலும், துயரங்கள் என்னால் உன்னை தீண்டிவிடுமோ என்ற அச்சத்தில் மந்தகாசம் சிந்தி செல்கிறேன், யாருக்கும் தெரியாமல் இருக்கட்டும் என.


Related image

Sunday, 15 July 2018

பொய்கள்

சிலநேரங்களில் சிறுபிள்ளைத்தனமாக பலநேரங்களில் பங்காளிகளாக ஓரிடத்தில் விளையாட்டாய் வேறிடத்தில் விபரீதமாய் ...
          குழந்தையிடத்தில் கூறும்போது  அன்பிற்காகவும், உற்றோரிடத்தில் உரைக்கையில் ஆறுதலுக்காகவும், இடங்களுக்கு ஏற்ப ஏற்றத்திற்காகவும், இரக்கத்திற்காகவுமாக, கண் துடிப்பாக சில தருணங்கள், கட்டவிழ்ப்பாகவும் சில தருணம், காண்பவர்கள் கண்வசமாகவும், காட்சிப்பிழை கலங்களாகவும் பல்வேறு பயன்பாடாகவும் பயன்பாட்டாளரின் அறிவுத்திறனையும் பயனாளிகளின் ஏமாற்றுத்தன்மையையும் பொறுத்து மாறுபடுகின்றது.
          கடமையில் பொய் கண்துடைப்பிற்கு, கல்வியில் பொய் கட்டணங்கள் அணிவகுப்பிற்கு, சிகிச்சையில் பொய் முதலீடு ஈட்டுவதற்கு, எங்கும் பொய்யின் பெயர் பேர்பெற்றதாக கர்வமாக அணிவகுக்கப்படுகின்றது. கடைக்கோடி மக்களானாலும் கடந்துவந்த பாதையில் இவரது பங்கிற்கோ பிறர் பங்கில் இவரோ அனுபவித்த ஒன்றாக இந்த பொய் இருக்கத்தான் செய்கிறது. ஏனோ அதனிடத்தில் அனைவருக்கும் இவ்வளவு அளவுகடந்த அக்கறையும் அபிமானமும் ஆர்பரித்துக்கொண்டு காணப்படுகின்றது. அளவுக்குமீறி பற்று அதன்பேரில் இருப்பதாலோ என்னவோ கர்வத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது தலைக்கனத்துடன்.
          செய்த செயலில் திருப்திமிக்க பார்ப்பவர்கள் கைகளை கொண்டு விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையிலும், அதிருப்தி அளிக்கும் பட்சத்தில் பார்பவர்கள் எண்ணிக்கையில் ஏராளமாகவும் ஆகிவிட்டனர்.



Image result for LIE

Friday, 13 July 2018

வழக்கு


பயன்படுத்துதல் மற்றும் பயன்பாடு என்பதில் தான் எத்தனை எத்தனை புரிதல்கள் உண்டு.

      பேசுபவர்கள் என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதை கூட நிதானமாக கேட்க கூட பொறுமை இருப்பதில்லை இந்த காலகட்டங்களில் பல நேரங்களில் பல இடங்களில் சில வார்த்தைகள் பல பிரிவுகளுக்கும் கூட காரணமாக அமையப்பெறுகின்றது. உண்மையில் நம்மில் பலருக்கு நமது எண்ணங்களே மேலோங்கி நிற்பதனாலோ என்னவோ பிறர் நம் முன்பாக என்ன கூற விழைகிறார்கள் என்பதை ஏற்கும் நிலையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றது.
       வீண் பேச்சுக்கள் ஒரு புறம் இருப்பினும்,விதண்டாவாதங்கள் மறுபுறம் மறுக்க முடியாமல் முண்டி அடித்துக்கொண்டு வந்துவிடுகின்றன. அனுசரித்து போக எண்ணும்  ஒரு தரப்பு, அனுசரிக்க முயற்சி செய்தவர்களின் பொறுமைக்கு சோதனை செய்யும் மனப்பாங்கு மறுதரப்பு. மண்டியிட்டாலும் மடியவைக்கும் குணம் கண்களில் சிலருக்கு. மனம் திறந்து பேசினால் போதும் மனம் இறங்க முன் வரும் குணம் சிலருக்கு. விட்டு பேசுவதில் சிலரும், விட்டுக்கொடுத்து பேசுவதில் பலரும் அவர் அவரது பங்கை சிறப்பாய் நடைமுறை படுத்திவிடுகிறார்கள். கடந்து போக முயற்சிக்கும் சிலருக்கு தடைக்கல்லாகவே பலரும் செயல்படுகின்றனர். இங்கு இயல்பாக வாழ்வதை கூட நடிப்பாக நினைப்பது தான் அதிக பட்சமான வேதனை. இதில் விந்தை என்னவெனில் நடிப்பவர்களை தான் இந்த உலகம் நல்லவர்களாகவே நம்பி கொண்டும், பார்த்து கொண்டும் இருக்கின்றது. இதுவே உண்மை நிலை.
          பேசுபவர் பேசுவதை வதை செய்பவர்களும் உண்டு. பேசியே வதைப்பவரும் இங்குண்டு. கடிந்து கொண்டாலும் பரிவு இருக்கும் இடமும் ஒருபுறமிருக்கையில், இலகுவாக பேசுகிறார்கள் என்றெண்ணி கண்டிப்பை கண்டு திகைத்து எழும் நிலையும் இன்னொருபுறம் இருக்கத்தான் செய்கின்றது.
           மொத்தத்தில் புரிதலில் பிரிதலுக்கு இடமுமில்லை, பிரிந்த பின்னர் புரிதலில் அர்த்தமுமில்லை. புரிந்துகொண்ட பின்னர் பிரிதலில் நல்லதொரு தீர்மானம் இருக்க நேரும், ஆனால் பிரிந்த பிற்பாதியில் புரிதல் வருமாயின் பிரிதல் பிரிதலே. பிரிதல் புரிந்தமட்டிலும் பிறர்தரா வண்ணம் காத்தலே சால சிறந்தது.
          வாழ்க்கையில் வாழ புரிதல் மிகுந்த பங்கினை கொண்டுள்ளது. பேசுவதை சாதாரணமாக பேச கற்றுக்கொள்ளுங்கள். பேசும்போது நிதானமாக பேசுங்கள். சொல்லவரும் கருத்தை சொல்வதற்கு முன்னராகவே எவ்வாறு கூறினால் சிறந்ததாக இருக்கும் என்பதையும், இவ்வாறு கூறினால் செய்தியை பெற்றுக்கொள்பவர்கள் புரிதலில் விரிவாக உணரவைக்க முடியுமா என்பதையும் சிந்தித்த பின்னராகவே பேச தொடங்குங்கள். பேச்சு வழக்கு விளையாட்டாக கூட வழக்காக வந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அசாத்தியமான காரணியாகவே மாறிவிட்ட நிலையிருந்தாலும் நிதானம் மற்றும் சிந்தனையின் வாயிலாக அதை சரி செய்ய இயலுமென்பதை மனதில் கொண்டு செயல்முறைபடுத்துங்கள்.

இல்வாழ்க்கை இன்பமாக அமைய நமது பங்கின்றி பிறிதொன்றும் இல்லை. 

   Image result for argument

Thursday, 12 July 2018

இதுவும் கடந்து போகும்


           காலமும் நேரமும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பது கிடையாது என்பது எப்படி நிதர்சனமான உண்மையோ அது போல கடமையும் காத்திருப்பதில்லை.
            கொண்டவர்கள் கோடி உண்டெனில் கோடியில் நின்றதும் கொடியினை இழந்ததும் கூடி இருந்தவரில் நல்லோர் என எண்ணியவர் தீமை விளைவித்ததும் கடுகளவிலும் நம்பிக்கை வைக்காதவரிடத்தில் இருந்து பாதுகாப்பும் பரிவும் கிடைக்கும் நேரத்தில் தான் தெரிகின்றது உற்றோர் யார் என்பது. காலத்தை கடிந்து கொண்டவர்கள் பலருண்டு கண்ணிமைக்காமல் காலத்தை பயன்படுத்தியவரும் இங்குண்டு. கவலை கடலில் முழ்கியவரும் உண்டு, மூழ்கிய கடலில் மூழ்கியே விடாமல் முத்தெடுத்து மீண்டவரும் உண்டு. பண்பாடும் கலாச்சாரமும் கடைபிடிக்கும் அதே தருணத்தில் தான் கண்ணெதிரில் குற்றங்கள் நடந்தும் கண்டுகொள்ளாத சமுதாயமும் இருக்கின்றது. சுயமரியாதை பெரிதும் பேசப்படும் இதே இடத்தில்  தான் பிறர் மரியாதையை சிறிதும் மதிக்கத்தவர்களும்  வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.
யார் வீழ்வது யார் வாழ்வது என்பதை கூட அவர் அவர் பிரியத்திற்கு ஏற்ப தீர்மானம் செய்ய இயலாத நிலை கொண்டு வாழும் மனிதர்களின் வாழ்க்கை. நான் எப்படி வாழ்கிறேன் என்பதை மனதில் வைத்து வாழ்வதை காட்டிலும் தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்படி இயல்பாக வாழ்கின்றனர் என்பதை மட்டுமே மன ஓட்டத்தில் வைத்து வாழ்பவர் அதிகம். எண்ணங்களின் மேன்மை இருந்து எண்ணினால் நல்லதுதான், ஆனால் இங்கோ பிறர் நலன் கெடுதல் வேண்டி எண்ணுவதே அதிகமாகிக்கொண்டு வருகின்றது. விந்தையும் வேடிக்கையும் நிறைந்த நிலையற்ற வாழ்வில், வாழ்விற்கான போராட்டம் தன்னை சார்ந்ததாக மட்டும்  இல்லாமல் பிறரை பார்த்து நொந்து கொள்வதாகவே  அமைந்துவிட்டது.
          இது நடக்கும் என்பதை காட்டிலும்  இதுதான் நடக்க வேண்டும் என சிலரும், இது மட்டும் தான் நடக்க வேண்டும் என சிலரும் வாழ்க்கை பாதையை  சுயநல நோக்கத்துடனே வழி வகுத்து கொள்கின்றனர். கடந்து போகும் பாதையை பூக்களால் நிரப்ப இயலாமல் இருந்தாலும் தயவுசெய்து முட்களால் நிரப்பி செல்லாதீர்கள். பின்னாளில் நீங்களே திரும்பி வரும் நேரத்தில் அது உங்களது கால்களையும் பதம் பார்க்கத்தான் செய்யும்.
          ஏனோ எண்ணங்களில் பல வித சிந்தனைகளை ததும்ப விடலானோம். தன்னையும் தன்னை சார்ந்தவரையும் பாதிக்காத வரையில் எல்லாம் நன்மைக்கே என விட்டுவிடுவது இயற்கை. ஆனால் அவ்வாரு அமையாத நிலையில் சற்று நிலை குலைந்து தான் போகின்றது மனம் அமைதி இழந்து. என்றாவது ஒருநாள் புரியவரும் நேரத்தில் தான் தெரிகின்றது நாம் காலம் கடந்து புரிதலானோம் என்பது.

இதுவும் கடந்து போகட்டும்.வாழ்க்கை ஒரே ஒரு முறை என்பதை மனதில் கொள்வோம்.பிறரை வாழ வைக்க இயலாவிடிலும் பரவாயில்லை பிறர்  வாழ்விற்கு இடையூறு ஏற்படுத்தாமல் அவர் அவர் தம் வாழ்க்கையை இனிதாய் இன்பமாய் வாழ கற்றுக்கொள்வோம்.






I Never Let Me Go...

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈...