Thursday, 12 July 2018

இதுவும் கடந்து போகும்


           காலமும் நேரமும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பது கிடையாது என்பது எப்படி நிதர்சனமான உண்மையோ அது போல கடமையும் காத்திருப்பதில்லை.
            கொண்டவர்கள் கோடி உண்டெனில் கோடியில் நின்றதும் கொடியினை இழந்ததும் கூடி இருந்தவரில் நல்லோர் என எண்ணியவர் தீமை விளைவித்ததும் கடுகளவிலும் நம்பிக்கை வைக்காதவரிடத்தில் இருந்து பாதுகாப்பும் பரிவும் கிடைக்கும் நேரத்தில் தான் தெரிகின்றது உற்றோர் யார் என்பது. காலத்தை கடிந்து கொண்டவர்கள் பலருண்டு கண்ணிமைக்காமல் காலத்தை பயன்படுத்தியவரும் இங்குண்டு. கவலை கடலில் முழ்கியவரும் உண்டு, மூழ்கிய கடலில் மூழ்கியே விடாமல் முத்தெடுத்து மீண்டவரும் உண்டு. பண்பாடும் கலாச்சாரமும் கடைபிடிக்கும் அதே தருணத்தில் தான் கண்ணெதிரில் குற்றங்கள் நடந்தும் கண்டுகொள்ளாத சமுதாயமும் இருக்கின்றது. சுயமரியாதை பெரிதும் பேசப்படும் இதே இடத்தில்  தான் பிறர் மரியாதையை சிறிதும் மதிக்கத்தவர்களும்  வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.
யார் வீழ்வது யார் வாழ்வது என்பதை கூட அவர் அவர் பிரியத்திற்கு ஏற்ப தீர்மானம் செய்ய இயலாத நிலை கொண்டு வாழும் மனிதர்களின் வாழ்க்கை. நான் எப்படி வாழ்கிறேன் என்பதை மனதில் வைத்து வாழ்வதை காட்டிலும் தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்படி இயல்பாக வாழ்கின்றனர் என்பதை மட்டுமே மன ஓட்டத்தில் வைத்து வாழ்பவர் அதிகம். எண்ணங்களின் மேன்மை இருந்து எண்ணினால் நல்லதுதான், ஆனால் இங்கோ பிறர் நலன் கெடுதல் வேண்டி எண்ணுவதே அதிகமாகிக்கொண்டு வருகின்றது. விந்தையும் வேடிக்கையும் நிறைந்த நிலையற்ற வாழ்வில், வாழ்விற்கான போராட்டம் தன்னை சார்ந்ததாக மட்டும்  இல்லாமல் பிறரை பார்த்து நொந்து கொள்வதாகவே  அமைந்துவிட்டது.
          இது நடக்கும் என்பதை காட்டிலும்  இதுதான் நடக்க வேண்டும் என சிலரும், இது மட்டும் தான் நடக்க வேண்டும் என சிலரும் வாழ்க்கை பாதையை  சுயநல நோக்கத்துடனே வழி வகுத்து கொள்கின்றனர். கடந்து போகும் பாதையை பூக்களால் நிரப்ப இயலாமல் இருந்தாலும் தயவுசெய்து முட்களால் நிரப்பி செல்லாதீர்கள். பின்னாளில் நீங்களே திரும்பி வரும் நேரத்தில் அது உங்களது கால்களையும் பதம் பார்க்கத்தான் செய்யும்.
          ஏனோ எண்ணங்களில் பல வித சிந்தனைகளை ததும்ப விடலானோம். தன்னையும் தன்னை சார்ந்தவரையும் பாதிக்காத வரையில் எல்லாம் நன்மைக்கே என விட்டுவிடுவது இயற்கை. ஆனால் அவ்வாரு அமையாத நிலையில் சற்று நிலை குலைந்து தான் போகின்றது மனம் அமைதி இழந்து. என்றாவது ஒருநாள் புரியவரும் நேரத்தில் தான் தெரிகின்றது நாம் காலம் கடந்து புரிதலானோம் என்பது.

இதுவும் கடந்து போகட்டும்.வாழ்க்கை ஒரே ஒரு முறை என்பதை மனதில் கொள்வோம்.பிறரை வாழ வைக்க இயலாவிடிலும் பரவாயில்லை பிறர்  வாழ்விற்கு இடையூறு ஏற்படுத்தாமல் அவர் அவர் தம் வாழ்க்கையை இனிதாய் இன்பமாய் வாழ கற்றுக்கொள்வோம்.






No comments:

Post a Comment

I Never Let Me Go...

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈...